Tuesday, October 11, 2011

பெர்லின் சுவரும் அதன் சுவடுகளும்…

பெர்லின் சுவரும் அதன் சுவடுகளும்…


பெர்லின் சுவர் இடிப்பு: ஒரு சரித்திரத் தவறு திருத்தப்பட்டதன் 20-வது ஆண்டு
பெர்லின் சுவர்…
...
மனித சுதந்திரத்துக்கு எதிரான அடையாளமாகப் பார்க்கப்பட்ட இந்த சுவர் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. 1989 ம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தில்தான் மக்களால் தகர்க்கப்பட்டது.
இன்று பெர்லினில் அந்நாட்டு மக்கள் பெரும் உற்சாகத்துடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். காரணம் பெர்லின் சுவரின் ‘பின்னணி’, அந்த சுவர் தகர்க்கப்பட்டதால் தாங்கள் அடைந்த சுதந்திரத்தின் மதிப்பு போன்ற உண்மைகள் புரிந்தவர்கள் அவர்கள்.
பெர்லின் சுவர் கட்டப்பட்டதன் பின்னணி?
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை ஜெர்மனி என்பது ஒரே நாடு. ஆனால் போரில் ஹிட்லரின் நாஸிப் படைகள் தோற்ற பிறகு ஜெர்மனியை நான்கு துண்டுகளாக கூறுபோட்டன சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நேசநாடுகள். அவரவருக்குப் பிடித்த பகுதிகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தனர். ஜெர்மனியின் ஒன்றுபட்ட தலைநகராக இருந்த பெர்லின் நகரும் நான்கு துண்டுகளாக்கப்பட்டது.
ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் நேச நாடுகளுக்குள் கடும் மோதல் எழ, சோவியத் ரஷ்யாவைத் தவிர மற்ற மூன்று நாடுகளும் ஓரணியாக நின்றன. இவை தங்கள் வசமிருந்த ஜெர்மனியின் பகுதிகளை தனி நாடாக்கின. அதுதான் மேற்கு ஜெர்மனி.
சோவியத் ஒன்றியம் மட்டும் தன்னிடமிருந்த பகுதியை தனி நாடாக அறிவித்தது 1949-ல். அதுதான் கிழக்கு ஜெர்மனி (ஜிடிஆர் – ஜெர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக்) இதன் தலைநகராக கிழக்கு பெர்லின் இருந்தது. மேற்கு ஜெர்மனியின் தலை நகர் மேற்கு பெர்லின்.
கிழக்கு மேற்கு பெர்லின்கள் அடிப்படையில் ஒரே நகரம்தான். சென்னை அண்ணா சாலைக்கு இந்தப் பக்கம் ஒரு நகரம், அந்தப் பக்கம் ஒரு நகரம் என்று திடீரென்று எல்லை வகுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இது. சோவியத் – அமெரிக்க பனிப்போரின் உச்சகட்ட நாட்கள் அவை.
இதனால் கிழக்கு ஜெர்மனியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்கள். குறிப்பாக 1950, 51, 52, 53-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக இப்படி எல்லை கடந்தார்கள். எனவே தனது அனைத்து எல்லைகளையும் சீல் வைத்து மக்களை ஓடவிடாமல் தடுத்தது கிழக்கு ஜெர்மனி.
ஆனால் பெர்லின் நகருக்குள் ஊடுருவலைத் தடுக்க முடியவில்லை.
எனவே 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே பெரிய சுவர் எழுப்பி மக்கள் இருபுறமும் செல்லாதபடி தடுத்தது கிழக்கு ஜெர்மனி. சுவருக்கு அந்தப் பக்கம் அமெரிக்காவும், இந்தப் பக்கம் சோவியத்தும் படைகளை நிறுத்தி வைத்திருந்தன.
உரிமைகள், உறவுகள், வர்த்தகம், வாழ்க்கை முறை என அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டனர் மக்கள். 28 ஆண்டுகள் இந்த பாதிப்பு தொடர்ந்தது. கிழக்கு ஜெர்மனி மக்கள் அந்த சுவரைத் தாண்ட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர்… அல்லது கைதாகி சிறைவாசம் அனுபவித்தனர்.

பெர்லின் சுவருக்கு முடிவு கட்டிய முன்னாள் சோவியத் அதிபர் மிகையீல் கார்பசேவ், அமெரிக்க அதிபர் புஷ் (சீனியர்) மற்றும் ஜெர்மனியின் சான்ஸலர் ஹெல்மட் கோல்
சோவியத் – அமெரிக்க பனிப்போரின் இறுதிதான், மக்களைப் பிரித்து வைத்திருந்த இந்த நீண்ட பெர்லின் சுவருக்கு முடிவு கட்டியது.
1989ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் மக்கள் இந்த சுவரைத் தாண்டி சந்தித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அடுத்த இரு தினங்களில் சுவரின் ஒரு பகுதியை மக்களே அடித்து நொறுக்கிவிட்டனர். கிழக்கு மேற்காகப் பிரிந்திருந்த ஜெர்மனிகளும் ஒன்றாகின.
இன்று பெர்லின் சுவர் இருந்த இடத்தில் அதன் சுவடு மட்டுமே மிச்சமுள்ளது. 20 ஆண்டுகள் கடந்து விட்டன… காலம் மக்களின் வலிகளை, மனதின் ரணங்களை ஆற்றிவிட்டாலும், இந்த சுதந்திரத்துக்கு தாங்கள் கொடுத்த விலையை நினைவுபடுத்திக் கொள்கின்றனர் ஜெர்மனி மக்கள். காயம் குணமாகிவிட்ட இடத்தில் மிச்சமிருக்கும் வடுவைத் தடவி, வலியை நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இது.
இந்த நினைவூட்டல்தான், தாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் மதிப்பை அடுத்த தலைமுறைக்கும் உணர்த்தும் என அந்த மக்கள் நம்புவதால் நடத்தப்படும் கொண்டாட்டம் இது.
இனி பெர்லின் சுவர் வரலாறு… அரிய புகைப்பட வடிவில்…

1961: ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே முள்கம்பி வேலி அமைக்கு பணியில் கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ஈடுபட்டனர். அதை மேற்கு பெர்லின் மக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சி.

1961- பெர்லின் நகரின் மையப்பகுதியான கிரன்டன்பர்க் வாயில் முள்கம்பி வேலியமைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டது.

1961: கிழக்கு பெர்லின் பகுதியில் சுவர் எழுப்பப்படுவதைப் கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸார்…

1961- ல் புதிதாகக் கட்டப்பட்ட பெர்லின் சுவரை எட்டிப் பார்க்கும் மேற்கு பெர்லின் சிறுமி…

1961 -அறுபதுகளில் மிகப் புகழ்பெற்ற புகைப்படம் இது. ஷுமென் எனும் கிழக்கு ஜெர்மனி வீரர் , பெர்லின் சுவரை கட்டிக் கொண்டிருந்தபோதே எகிறி குதித்து மேற்கு ஜெர்மனிக்குள் ஓடும் காட்சி… சோவியத் கட்டுப்பாட்டில் கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை கொடுமையானது என்பதை உலகுக்குச் சொல்ல அமெரிக்கா இதைப் பயன்படுத்திக் கொண்டது.

அம்மா கிழக்கு பெர்லினில்… மகளோ மேற்கு பெர்லினில்… குறுக்கே நிற்கும் முள்வேலி கொண்டை வைத்த சுவரைத் தாண்டி பாசத்தைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி…

1962 – பெர்லின் சுவரைக் கடக்க முயன்ற தங்கள் நாட்டுக்காரரை கிழக்கு ஜெர்மனி வீரர்கள் சுட்டுக் கொன்று தூக்கிச் செல்கிறார்கள்.

1962-ஆண்டு பெர்லின் சுவர் தோற்றம்… மொத்த நீளம் நகரின் மேற்குப் புறத்தில் இருந்த மூன்று பகுதிகளிலும் சேர்த்து 156 கிமீ. இதில் பெர்லினைப் பிரித்த சுவரின் நீளம் 43 கிமீ.


1985- கோபுரம் அமைத்து கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி வீரர்கள்…

1989 – பெர்லின் சுவருக்கு எதிராய் கிழக்கு ஜெர்மனி மக்கள் நடத்திய போராட்டம்…

1989-நவம்பர் – பெர்லின் சுவரை உடைக்கும் மேற்கு ஜெர்மனிவாசிகள். கிழக்கு ஜெர்மனி போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார்கள்…
1989- நவம்பர்- உடைக்கப்பட்ட சுவரின் வழியே எட்டிப்பார்க்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸ்காரர்.
28 ஆண்டுகள் மக்களைச் சிறைவைத்திருந்த சுவரை, மக்களே உடைத்த காட்சி…



1989 நவ 12 -மேற்கு ஜெர்மனிக்குள் வெள்ளமாய் நுழையும் மக்கள்..
பெர்லின் சுவரும்… அதன் சுவடுகளும்!

2009: சரித்திர சின்னமாய் மிச்சமிருக்கும் பெர்லின் சுவர்


2009- நவம்பர் 9-12: பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்!

No comments:

Post a Comment